Thursday, December 08, 2016

ஜெ.ஜெ. -- சில குறிப்புகள்


மிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெ. ஜெயலலிதா காலமாகிவிட்டார். அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு என்கிற ரீதியில் 05.12.2016 இரவு 11.30 என்றாலும் அவர் எப்போது காலத்தோடு கரைந்தார் என்பது திருமதி சசிகலா மற்றும் அப்போல்லோவில் உள்ள சில நபர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ராஜ ரகசியங்கள் என்பது ஆபத்தானது மட்டுமல்ல. அருவெறுப்பானதும் கூட. மொத்தமும் மிக விரைவில் வந்து விடக்கூடும். 

றந்தவர்களை நாகரிகம் கருதி விமர்சிக்கக்கூடாது என்கிறார்கள். மரபுப்படி சரி. ஆனால் இறந்தவர் தனி மனிதராக இருந்தால் அவரால் அவரின் குடும்பம் மட்டுமே பாதிக்கப்பட்டு இருக்கும். இறந்தவர் ஒரு பெரிய சமூகக்கூட்டத்திற்குப் பொறுப்பானவராக இருக்கும் பட்சத்தில் மொத்த சமூகமே பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும் அல்லவா? ஜெ. இறப்பு குறித்து, அதற்குப் பின்னால் உள்ள மர்மங்கள் தொடர்பான விசயங்கள் கடந்த இரண்டு நாட்களாகச் சமூக வலைத்தளங்களில் துணுக்குச் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றது. இன்னும் வரும். அதிகமாக வரும் போது அடுத்தத் தேர்தலுக்குத் தமிழ்நாடு தயாராகி விட்டது என்று அர்த்தம். 

ரசியல் என்றால் அதன் இறுதி இலக்கு அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டுமே. ஜெ. வின் பயணம் எம்.ஜி.ஆர் மரணத்தின் போது பீரங்கி வண்டியில் இருந்து இறக்கி விடப்பட்டது முதல் தொடங்கியது. அதேபோல ராணுவ மரியாதையுடன் முடிந்துள்ளது. அவர் எடுத்த லட்சியத்தில் முழுமையாக வெற்றியடைந்து விட்டார். ஆனால் மக்கள் மனதில்? 

றைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைந்த போது நான் வசிக்கும் பகுதிகளில் எங்குப் பார்த்தாலும் ப்ளக்ஸ் போர்டு ஒவ்வொரு இடத்திலும் நீக்கமற நிறைந்து இருந்தது. சாதாரணப் பெட்டிக்கடை முதல் சிறிய பெரிய நிறுவனங்கள் வரைக்கும் அவரவர்க்குத் தகுந்தாற் போல வைத்திருந்தார்கள். இது தவிரப் பள்ளிக்கூடங்கள் அவரவர் தன்மைக்கேற்ப மவுன அஞ்சலி முதல் பிரார்த்தனை கூட்டம் வரைக்கும் நடத்தினார்கள். ஏற்றுமதி நிறுவனங்கள் காலை வேலையில் வேலைத் தொடங்குவதற்கு முன்பு இறை வணக்கம் போல அப்துல்கலாம் அவர்களுக்கு அஞ்சலிக் கூட்டம் நடத்தி முடித்து வேலையைத் தொடங்கினார்கள். 

னால் ஜெ. மறைவுக்குப் பின்னால் எந்தச் சலனத்தையும் எங்கேயும் பார்க்க முடியவில்லை. பலரால் வெளியே பகிர முடியாத அவஸ்தையில் நாகரிகம் கருதி அமைதியாய் இருந்தார்கள். ஆனால் திருப்பூருக்கென்று ஜெ. அரசு மிக அதிகமாகச் செய்துள்ளது. 2001க்கு பிறகு திருப்பூர் சந்தித்த பெரிய வீழ்ச்சியில் இருந்து மீண்டு வந்ததற்கு முக்கியக் காரணம் மறைந்த முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா என்றால் மிகையல்ல. 

மரர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மறைவு உருவாக்கிய அனுதாப அலையில் ஜெ. முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் பத்திரிக்கை வாயிலாகத் தினமும் படித்துக் கொண்டே வந்தவன் என்ற முறையில் அவரின் ஒவ்வொரு செயல்பாடுகளும் இப்போது நினைவுக்கு வந்து போகின்றது. 

அந்த சமயத்தில் சமூகத்தில் உள்ள திரைப்பட மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாகக் கோட்டைக்கு வரவழைக்கப்பட்டு "மரியாதை நிமித்த சந்திப்பு" என்கிற ரீதியில் ஒரு நாடகம் நடத்தப்பட்டது. அப்போது பலரின் அனுபவங்களும் ஜெ. ஆட்சியில் இல்லாத போது பத்திரிக்கையில் வந்தது. ஹிண்டு என்.ராம் சொன்ன வாசகங்கள் இப்போதும் என் நினைவில் உள்ளது. "நான் உள்ளே நுழைந்ததும் ப்ளாஷ் மழை தொடர்ந்து கொண்டேயிருந்தது" என்கிற ரீதியில் நிறைய விசயங்களைப் பகிர்ந்திருந்தார். 

றண்ட நிலத்தில் மழை பெய்தால் குறிப்பிட்ட நேரம் வரை மழை பெய்த அடையாளம் தெரியாத அளவிற்கு நிலம் மொத்த நீரையும் உறிஞ்சு விடும். அதன் பிறகு தான் நிலத்தில் விழுந்த மழைநீரின் அடையாளம் தெரியும். இப்படித்தான் ஜெ. வின் அரசியல் பயணம் தொடங்கியது. முதல் முறை ஆட்சிக்கு வந்த போது அதுவரையிலும் தன் வாழ்வில் அடைய முடியாத அத்தனை எண்ணங்களுக்கும் சேர்த்து வடிகால் போலத் தனக்குக் கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்த தொடங்கினார். 

திமுக வை பிடிக்காதவர்கள், கலைஞர் எதிர்ப்பு என்பதனை ஒரு கொள்கையாக எம்.ஜி.ஆர் உருவாக்கியதை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இவரின் பயணம் தொடங்கியது. வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வந்தது. மக்கள் மனதில் ஒரு பக்கம் இலவசம் என்பதனை அடிப்படை உரிமை என்பதாக மாற்றினார். மறுபுறம் பணம் பாதாளம் வரைக்கும் பாய வைக்க முடியும் என்று டெல்லி வரைக்கும் கொண்டு சேர்த்தார். 

அதனால் என்ன? 

"ங்கள் சந்துக்கு ஏன் ஓட்டுக்குப் பணம் கொடுக்க வரவில்லை?" என்ற கொள்கை கொண்ட மக்களிடம் போய் ஊழல் என்ற வார்த்தையைப் போய்ச் சொன்னால் அவர்கள் வாயால் சிரிக்க மாட்டார்கள். நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டு அரசியல் செய்வதே உத்தமம் என்று எதிர்க்கட்சிகள் அத்தனை பேர்களும் திகைத்துப் போனதை இவரின் 'வெற்றி' என்றும் 'இரும்பு மனுஷி' என்றும் அனைவரும் போற்றுகின்றார்கள். 

"ணம் முக்கியமில்லை. வெற்றி மட்டுமே இலக்கு" என்பது இவரின் கொள்கை. ஆனால் "வெற்றியும் வேண்டும். சேர்த்து வைத்திருக்கும் பணமும் போய்விடக்கூடாது. முடிந்தால் இன்னமும் மற்றவர்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்" என்பது இவரை எதிர்த்தவர்களின் கொள்கை என்னும் போது எவருக்கு வெற்றி வரும்? 

"தவி தருகின்றேன். அதன் மூலம் சம்பாதித்துக் கொள். காலம் முழுக்க பணிவாய் இருக்கக் கற்றுக் கொள். ஆனால் மக்களின் அடிப்படை வாழ்க்கையில் கையை வைத்து விடாதே" என்பது இவரின் பாணி. அது எம்.ஜி.ஆர் உருவாக்கிக் கொடுத்த பாதை. ஆனால் எதிர்த்தவர்களின் கொள்கை மொத்தத்திலும் வித்தியாசமானது. "எங்களைத் தவிர வேறு எவரும் இங்கே வாழ்ந்து விடக்கூடாது" என்ற கொள்கையினால் எழ முடியாத பள்ளத்தில் படுத்துக் கிடக்க வேண்டியதாகி விட்டது. 

ஜெ. வின் அரசாங்கம் செய்த ஊழல்களை, அதன் மூலம் உருவான மோசமான விளைவுகளை, தமிழகப் பின்னடைவுகளை, எதிர்காலம் சந்திக்கப் போகும் சவால்களை எந்த ஊடகமும் கண்டு கொள்ளாமல் மௌனித்து ஜால்ரா வாக மாறியதற்கு ஒரே காரணம் தங்கள் தொழிலுக்குப் பங்கமில்லை. தாங்கள் விரும்பியது கிடைக்கின்றது. குறிப்பாக நம் தொழில் அடுத்தவர் எப்போது அபகரிப்பார் என்ற அச்சம் இல்லாமல் இருந்ததே முக்கியக் காரணம். 

றம் என்பது அடுத்தவர்களுக்கு மட்டுமே. அது தனக்கானது அல்ல என்று மாறிய மக்கள் கூட்டத்திற்கு அரசியல்வாதிகளும் ஊடகங்களும் நீதிக்கதைகளைச் சொல்ல வேண்டும் என்பது எதிர்பார்ப்பது மடத்தனம். ஊடகங்கள் செய்வது வேசித்தனம் அல்ல. பிழைத்திருத்தல் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

05.12.2016 அன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராத போது  ஊடகத்தில் தவறாக சொன்ன போது கூட அப்போதும் கூட காகங்கள் கரைந்து கொண்டே இருந்தன. அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்ததாகவே இருந்தாலும் எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் தொடர்ந்து கரைந்து கொண்டேயிருந்தார்கள். காரணம் என்னவாக இருக்க முடியும்? காகங்களுக்கு எழவு வீடு, திருமண வீடு என்ற பாரபட்சம் இருப்பதில்லை. உணவு தான் முக்கியம்.

தவிகளுக்காக நெடுஞ்சாண்கிடையாக அமைச்சர்கள் படுத்து தங்கள் விசுவாசத்தைக் காட்டினார்கள். இவர்கள் பச்சைப் பொய்யை தேன் தடவி பகிர்ந்து கொள்கின்றார்கள்.  அவர்கள் செய்வது மானத்தை துறத்தல். இவர்கள் செய்வது மரியாதையை இழத்தல். மொத்தத்தில் சமகாலத்தில் பதவிக்காக, பதவியை எதிர்பார்த்து சோரம் போவது என்பது "அங்கீகாரத்தை சென்றடைவதற்கான சரியான பாதை" என்பதை நாம் தான் உணர்ந்திருக்க வேண்டும்.

எம்.ஜி.ஆரை விடப் பல படிகள் மேலே சென்று ஜெ. புகழ் பெற்றவராகத்தான் மறைந்துள்ளார். கூட்டணிக் கட்சிகளைக் கதிகலங்க வைத்துள்ளார். உங்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. எனக்கு பெயருக்கென்று ஒரு எதிரி இருந்தால் போதும். நீங்கள் சற்று ஒதுங்கி நின்று வேடிக்கைப் பாருங்கள். உங்களுக்குத் எது தேவை என்று எனக்குத் தெரியும்? அதைத் தருகின்றேன். அதைத் தவிர அதிகார எல்லைக்குள் வர நினைக்காதே?" என்று தான் உணர்த்தியுள்ளார். சம்மந்தப்பட்டவர்களும் "இதுவே எங்கள் பாக்கியம்" என்பது போலத்தான் பின்னால் இருந்து இயங்கியுள்ளார்கள்.

ரியோ தவறோ மாறிய மக்களின் நாடித்துடிப்பைச் சரியாகவே புரிந்து அரசியல் செய்துள்ளார். மொத்த ஊடகங்களையும் என்னால் விலைக்கு வாங்க முடியும்? உங்களின் இ.பி.கோ. சட்டம் என்பது எனக்கானது அல்ல என்பதனை பட்டவர்த்தனமாகவே தெரியப்படுத்தி மறைந்துள்ளார். முதல் முறையாக இந்தியாவில் சட்டத்தினால் பதவியிழந்த முதல் முதலமைச்சர் என்ற அவப்பெயரையும் பெற்று மொத்தத்தில் ஒரு குற்றவாளியாகச் சட்டத்தின் பார்வையில் நீக்க முடியாத கறையோடு காலத்தோடு கரைந்து போய்விட்டார். 

னால் தனக்குப் பிறகு அடுத்தவரை உருவாக்கி அவர்கள் மூலம் தங்களின் பெருமையை அதிகப்படுத்தியிருக்க வேண்டும் என்ற அடிப்படை உண்மைகளை உணராத ஜெ. வும் கலைஞரும் உருவாக்கும் வெற்றிடத்தின் மூலம் தமிழகம் அடுத்த மாறுதலுக்குத் தயாராக இருக்கின்றது என்பது மட்டும் உண்மை. 

பின்குறிப்பு 

தமிழக அரசியல் மர்ம வரலாற்றை எவரும் பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார்கள். நம் நெருக்கமான நட்பு வட்டாரம் பாதிக்கும் என்ற காரணத்தை முக்கியமாகக் கருதுகின்றார்கள். நண்பர்கள் குழுவொன்று இந்தக் கோப்பினை தயாரித்துத் தனிப்பட்ட பார்வைக்கு அனுப்பி இருந்தார்கள். 

சவுக்குச் சங்கர் எழுதிய பல கட்டுரைகள், ஆனந்த விகடனில் வந்த மந்திரி தந்திரி (திமுக மற்றும் அதிமுக) பற்றி வந்த தொகுப்பு. கடந்த 25 வருட அரசியல் வரலாறு, அதிகார வர்க்கம், ஊழல்களின் பட்டியல், தனிப்பட்ட குணாதிசியங்கள் போன்றவற்றை வரிசைக்கிரமாகக் கொடுத்துள்ளனர். வரலாறு என்பது சற்று பெரிதானது தானே? ஆயிரம் பக்கங்களுக்கு அருகே வந்துள்ளது. ஆனால் படிக்கப் படிக்கச் சுவராசியமாகவே உள்ளது. நீங்கள் கடந்த 25 வருடமாகத் தினசரி வாரப் பத்திரிக்கைகள் படித்து வந்தவராயின் இது அனைத்து உங்களுக்குத் தெரிந்த செய்தியாக இருக்கும். 

தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மொத்தமாகப் படிக்க முடியாது என்று ஒதுங்கி விட வேண்டாம். திமுக மற்றும் அதிமுக வில் உள்ள ஒவ்வொரு அமைச்சர்களையும் பற்றியும், அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் குறித்தும் தேவைப்படும் போது அவ்வப்போது எடுத்து ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும். வரலாறு முக்கியம் அமைச்சரே


தொடர்புடைய பதிவுகள்









12 comments:

நிகழ்காலத்தில்... said...

வீதிதோறும் பணம் கொடுப்பதற்கான நிர்வாகமுறையில் அதிமுக மிகச் சிறப்பாகவே செயல்பட்டது.. எதிர்கட்சிகள் அப்படி அல்ல..

Unknown said...

சீரழிக்கும் டாஸ்மாக்கை இழுத்து மூடியிருந்தால் ,நானும் ஒப்புக் கொள்வேன் இரும்பு மனுஷி என்பதை !

Amudhavan said...

இத்தனை விரிவாக அலசி ஆராயும்போது உங்களுக்கு செம்பரம்பாக்கம் ஏரித்திறப்பு நினைவு வரவில்லை என்பது ஆச்சரியம்தான்.

கரந்தை ஜெயக்குமார் said...

ஆழ்ந்த இரங்கல்கள்

எம்.ஞானசேகரன் said...

இன்னும் விரிவாக எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்...

RAVINDRAN MARIAPPAN said...

arumai arumai. 100% Correct. M.Ravindran Madurai

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

இரும்புப்பெண்மணியைப் பற்றிய பகிர்வு அருமை.

'பரிவை' சே.குமார் said...

மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் அண்ணா....
இன்னும் விரிவாக எழுதுங்களேன்...

Rathnavel Natarajan said...

Great.

Unknown said...

கலஞர் உயிரோடு இருக்கின்ற போது
வெற்றிடம் அவர் எந்த வேலை செய்யாமல்
பிம்பமாக மாறி( ஐகான்) மந்திரம் செய்றார்.என்பது போல பதிவு இருக்கு
உங்க எண்ணம் திமுக அழிந்து போகனும்
என்பதை தெரிவிக்கிறிர்கள்
ஆனால உண்மை வேற

ஜோதிஜி said...

உங்கள் விமர்சனங்கள் அனைத்தையும் முழுமையாக படித்தேன் நாச்சியப்பன். நீங்கள் எல்லாவற்றையும் தவறான பார்வையில் பார்க்குறீங்க. ஒருவர் மேல் வைத்திருக்கும் அபிமானம் என்பது வேறு. அவர் நிறை குறைகளை அலசி விமர்சன பார்வையில் பார்ப்பது என்பது வேறு. உங்கள் வாசிப்பு பார்வை மாற என் வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu said...

விரிவாக ஆய்ந்து எழுதியிருக்கிறீர்கள். நல்ல பதிவு. நாங்களும் இரங்கலாகத்தான் இறந்த பிறகு ஒருவரைப் பற்றி அன்றேனும் எழுதக் கூடாது என்ற ஒரு எண்ணத்தில் பதிவும் எழுதினோம். யாதார்த்தம் அறிந்திருந்தாலும். நீங்கள் வெளிப்படையாக அழகாக எழுதிவிட்டீர்கள்! மர்மங்கள் விலகும் நாள் வரவேண்டும் என்றாலும், இனி மர்மங்கள் வெளிவருமா....வெளிவந்தாலும் நம்பத்தகுந்த வகையில் இருக்குமா என்பது ஐயமே.