Friday, August 03, 2012

காப்பது கடமை

வாழ்நிலைகளை கல்வெட்டுக்கள் மூலமும், செப்பேடுகள் மூலமாகவும், ஆவணப்படுத்தி வந்த தமிழர்களின்   ஆவணப்படுத்தல் என்பது காலவோட்டத்தில் அருகி வருகிறது. அதற்கான முன்னேற்பாடு செய்பவர்களை ஆதரிப்பது என்பதும்  குறைந்து வருகிறது. 

காலம் காலமாக இப்படித்தான் தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகள் தேய்ந்து வந்துள்ளது. எஞ்சியுள்ள சான்றுகளை வைத்துதான் மூத்தகுடி தமிழர்களின் வாழ்க்கை தடங்களை நம்மால் உணர முடிகின்றது. ஒரு தலைமுறை முடிந்து அடுத்த தலைமுறைக்கு இந்த ஆவணங்கள் கடத்தப்படுவதில்லை. அதன் அவசியமும் உணரப்படுவதில்லை. 

இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் ஆவணப்படுத்தலை இலகுபடுத்தலுக்கான ஏராளமான சாத்தியக்கூறுகள் நம்மிடம் உள்ளது. மனமிருந்தால் மார்க்கமுண்டு. 

ஆனாலும், ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் ஓராயிரம் காரணங்கள்.

உத்தேச கணக்காக இந்த உலகம் 460 கோடிகள் ஆனது. இந்த உலகத்தில் முதல் மனிதன் தோன்றி 30 லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டது. தன்னுடைய பிரச்சனையை உணரத் தொடங்கி, மனிதன் மிருகத்தன்மையில் இருந்து மாறி 50 ஆயிரம் ஆண்டுகள் ஆகி உள்ளதாக மானிடவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அந்த 50 ஆயிரம் ஆண்டுகள் என்பது ஏறத்தாழ உத்தேச கணக்காக 600 தலைமுறைகள். 

இதில் கவனிக்க வேண்டியது என்ன தெரியுமா? 

ஏறக்குறைய 36 ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வெளி உலகம் ஏதும் தெரியாமல்  தன்னுடைய குறைகள் ஏதும் தெரியாமல் குகைக்குள்ளேயே வாழ்ந்து கழித்து இருக்கின்றான்.

கடந்த 70 தலைமுறைகளில் தான் எழுத்து, பேச்சு, விவசாயம் போன்ற அத்தனை முன்னேற்றங்களும், குறிப்பாக ஆறு தலைமுறைக்கு முன்னால் தான் அச்சடித்த வார்த்தைகள், எழுத்துக்கள் என்று அத்தனை முன்றேங்களும் நிகழ்ந்துள்ளது. அச்சடித்த வார்த்தைகள் உருவான பின்பு தான் நாகரிகம் என்பது மிக வேகம் பிடித்து ஓடத் தொடங்கியது. 

ஆனால் இந்த கால கட்டத்தில் எத்தனை மொழிகள், கலாச்சாரம், பண்பாடுகள், எழுத்துக்கள் உருவாகி உள்ளது என்பது யோசித்துப் பாருங்கள்? 

வாழ்ந்த மக்களை எத்தனை விதமாய் புடம் போட்டு பார்த்து இருக்கிறது. ஆனாலும் இந்த தமிழ் மொழி இன்று வரையிலும் சுட்ட தங்கம் போல ஜொலிப்பாய் தான் விளங்கிக்கொண்டு இருக்கிறது.

அமெரிக்காவின் மிக உயர்ந்து பொக்கிஷமாக கருதப்படும் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் போல முப்பது மடங்கு பெரிதான பிரமிடுகளை தந்த எகிப்தியர்களின் எகிப்திய மொழி எங்கே போயிற்று?

3000 ஆண்டுகளுக்கு முன்னால் உலகில் சிறந்த மொழி சமஸ்கிருதம் தான் என்று சொல்லப்பட்ட மொழியின்  இன்றைய நிலை என்ன ?

மாபெரும் வல்லரசை உருவாக்கிய ரோமபுரி மன்னர்களின் இலத்தின் மொழியை இன்று காணவில்லை?

புத்தர் பரப்பிய பாலி மொழி, மகா அலெக்சாண்டர் பேசிய கிரேக்க மொழி, ஏசு நாதரின் கிப்ரூ மொழி என்று இன்று வரையிலும் நீண்ட பட்டியல் உண்டு.

இவையெல்லாம் காத்திருப்பு பட்டியல் அல்ல? காணாமல் போன மொழிகளின் பட்டியல்? 

ஆனால் தமிழனின் தமிழ்மொழி?

இன்று வரையிலும் எத்தனையோ வேடதாரிகள் நாங்கள் தமிழை வளர்க்கின்றோம் என்று சொல்லியே தங்கள் குடும்பங்களுக்கான சொத்துக்களை வளர்த்துக் கொண்டார்களே தவிர வேறொன்றும் பெரிதாக நடக்கவில்லை. அவர்களின் உண்மையான அக்கறையை நாம் தினந்தோறும் செய்திதாள்களின் மூலம் பார்த்துக் கொண்டும் இருக்கின்றோம்.

கி.பி. 20ம் நூற்றாண்டில் பொது நூலகங்களின் வளர்ச்சி என்பது மிகவும் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் என்று சொல்லாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நூலக இயக்கம் சிறந்து விளங்குகின்றது நூலகப் பாதையில் இருபதாம் நூற்றாண்டினைப் “பொற்காலம்” என்று குறிப்பிடலாம்.

சென்னையிலுள்ள கன்னிமாரா பொது நூலகம் இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும். கன்னிமாரா பொது நூலகத்தை முதன் முதலில் தொடங்க, திட்டம் செய்து அடிக்கல் நாட்டியவர் “போபி இராபர்ட் போர்க் கன்னிமாரா பிரபு” (Bobby Robert Bourke Baron Connemara 1827 - 1902) என்பவர். இந்த நூலகம். 1890-ல் மக்களுக்காக, மக்களே, மக்களால் நடத்தும் வகையில்தான் பொது நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

“படிக்க ஆர்வமுள்ள அனைவருக்கும் நூலகம் பயன்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன். அந்த ஆசை நிறைவேறும் என்று நம்புகிறேன்” என்றார். பிரிட்டிஷ் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அவருக்கு பின்வந்த “ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக்” என்பவரால் 1896ல் டிசம்பர் 5 ம் நாள்   பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து விடப்பட்டது.

இந்தியாவை ஆள வந்த பிரிட்டன் ஆட்சியாளர்களைப் போல நமது தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படும் உ.வே.சா பங்களிப்பு என்பது தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாதொன்றாகும். 

ஓலைச்சுவடி வடிவிலும், கையெழுத்தேடு வடிவங்களிலும் இருந்த பழங்கால நூல்கள் அச்சில் ஏறுவதற்கு காரணமாக இருந்தவர் உ.வே.சா. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, நெடுநல்வாடை என பல பழம்பொக்கிஷங்களும் அழியாமல் பாதுகாத்த பெருமை அவருக்குண்டு.

சமய நூலான சீவக சிந்தாமணியின் ஓலைச்சுவடிப் பகுதி அக்காலகட்டத்தில் சமயக்காழ்ப்பினால் புறக்கணிக்கப்பட்டிருந்த சமண இலக்கியங்களைப் பற்றி அறியும் ஆவலையும், அதனை அழிய விடாது அச்சேற்ற வேண்டும் எனும் எண்ணத்தையும் உ.வே.சா வினுள் தூண்டியது.

சமண இலக்கியங்களோடு பல ஓலைச்சுவடிகளையும் உ.வே.சா தேடித் தேடிச் சேகரித்தார். சேகரித்தது மட்டுமின்றி அவற்றைச் சேமித்து, பகுத்து, பாடவேறுபாடு கண்டு, தொகுத்து, பிழை திருத்தி அச்சிலேற்றும் பணியையும் துவங்கினார். பின்னாளில் அவற்றுக்கு உரையெழுதும் அரும்பணியையும் ஆற்றினார். இப் பணியானது அவர் தனது 84 ஆம் அகவையில்  இயற்கையெய்தும் வரை இடையறாது தொடர்ந்தது.

அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.

உ.வே.சா போலவே தற்போது தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டையில் உள்ள ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது துணைவியார் தங்களால் முடிந்த மகத்தான பணியை செய்து கொண்டிருக்கிறார். 


ஞானாலயாவைப் பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்ள இந்த வலைதளம் உதவுகின்றது.

வலைதள முகவரி http://www.gnanalaya-tamil.com/ 

ஞானலாயா போன்ற தனிப்பட்ட நபர்களை ஊக்குவித்து வளர்ப்பதை விட தனது நலன் சார்ந்து ஒவ்வொரு விசயத்தையும் பார்ப்பது தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பண்பாடு. மொத்த தமிழ்நாட்டில் உள்ள நூலக வளர்ச்சியை விட ஒரே இடத்தில் முடக்கப்பட்ட இந்த அறிவுசார் சொத்துக்களை பரவலாக்கப்பட வேண்டும்.

இந்த தமிழ்மொழி இன்று வரைக்கும் வளர்ந்து இன்று இணையத் தமிழ் மூலம் உலகத் தமிழர்களை ஒன்றிணைத்துக் கொண்டிருக்கிறது.

கிராம, நகர்ப்புற நூலகங்களை, அரசாங்கத்திற்கு வரும் ஆட்சியாளர்கள் சிறப்பான திட்டத்துடன் உதவி செய்வதன் மூலமும், ஞானலயா கிருஷ்ணமூர்த்தி போன்றோர்களுக்கு பொருளூதவி செய்வதன் மூலமும் பலரும் வந்து வாசிக்க வழி வகுக்கும்.இதேவேளை  'ஞானாலயா 'வின் சேகரிப்புகளை புதியதொழிட்பத்தினடிப்படையில் ஆவணப் படிவங்களாக்கி, இணையப் பெருவெளியில் இணைப்பதன் மூலம் அதன் சேவை விரிவாக்கம் பெறவும், பாதுகாக்கப்படவும் முடியும் என்பதனையும் இவ்வாறான பணிகளில் ஈடுபடும் அன்பர்கள் கருத்திலும், கவணத்திலும் கொள்ள வேண்டும்.

தாய் என்பது ஒரு தலைமுறைக்கான பந்தம். தாய் மொழி என்பது தலைமுறைகளை தாண்டிச் செல்லும் பந்தம்.. அந்த மொழியை ஆவணப்படுத்தி வளர்க்க உதவும் திரு. கிருஷ்ணமூர்த்தி தம்பதிகளின் முயற்சிக்கு,  ஒளிபடைத்த கண்ணினராய், உறுதி மிக்க நெஞ்சினராய் உதவுவோம் வாருங்கள் !

ஞானாலயா பற்றிய மேலதிக விபரங்கட்கு;



ஞானாலயாவுக்கு நெட் பேங்கிங் வழியாக உலகின் எந்த இடத்தில் இருந்தும் நிதி  உதவி செய்யலாம். 

தொடர்புக்கான முகவரி, மற்றும்
நிதி அனுப்புவதற்குத் தேவையான விவரங்கள்:
வங்கி விவரம்:
Account Holder: B. KRISHNAMOORTHY
S B Account Number: 1017047
Bank Name: UCO Bank
Branch: PUDUKKOTTAI

5 comments:

சார்வாகன் said...

வணக்கம் சகோ,

நல்ல பதிவு.ஆனால் ஒவொரு வரியிலும் எனக்கு கேள்விகள் மட்டுமே தோன்றுகிறது.

1.//கடந்த 70 தலைமுறைகளில் தான் எழுத்து, பேச்சு, விவசாயம் போன்ற அத்தனை முன்னேற்றங்களும், குறிப்பாக ஆறு தலைமுறைக்கு முன்னால் தான் அச்சடித்த வார்த்தைகள், எழுத்துக்கள் என்று அத்தனை முன்றேங்களும் நிகழ்ந்துள்ளது. அச்சடித்த வார்த்தைகள் உருவான பின்பு தான் நாகரிகம் என்பது மிக வேகம் பிடித்து ஓடத் தொடங்கியது.//

அருமையான் கருத்து.இந்த உண்மையை பலர் ஒத்துக் கொள்வது இல்லை. மனித சுமுதாயம் கொஞ்சம் கொஞ்சமாகவே இயற்கையில் இருந்து கற்று விழுந்து, எழுந்து வாழ்வியல்,சமூகவியல் சார் சட்டங்களை உருவாக்கினார் என்பது பலர் மறைக்க நினைக்கின்றனர்.

*************

2./3000 ஆண்டுகளுக்கு முன்னால் உலகில் சிறந்த மொழி சமஸ்கிருதம் தான் என்று சொல்லப்பட்ட மொழியின் இன்றைய நிலை என்ன ?/

இந்த சமஸ்கிருதம் என்பது என? அது குறித்து சார்பற்று ஏதேனும் அறிய இயலுமா?
சம்ஸ்கிருதம் தென் இந்தியாவில் பிராஹி( பொ.ஆ .மு 300) எழுத்திலும், பிறகு (தமிழ்) கிரந்தத்திலும் எழுதப்பட்டதாக் சில ஆவனங்கள் உண்டு.தமிழும் பிரஹி,கிரந்தம்,வட்டெழுத்து என்ற முறைகளில் எழுதப் பட்டு இபோதைஅய் முறைக்கு வந்தோம்.மலையாளம்,கன்னடம்,தெலுங்கு,சிங்களம் போன்றவை இன்றும் கிரந்தத்தில் சிறிய மாற்றங்களுடன் பயன்படுத்துகின்றன.

சமஸ்கிருதம் வட இந்தியாவில் குப்தா,நாகரி,(இப்போது)தேவ நாகரி என எழுத்தில் மாற்ரம் கண்டது.

எழுத்துரீதியான் பழமையான சம்ஸ்கிருதம் பற்றி அசோகர் கால பிராஹி முன்பு இருந்தது போல் நான் அறியவில்லை.அறிந்த நண்பர்கள் த்கவல்கள் பகிரலாம்.



http://www.ancientscripts.com/sa_ws.html


நன்றி

'பரிவை' சே.குமார் said...

நல்ல கட்டுரை...
ஞானாலயா பற்றி சொல்லியிருப்பதும் சிறப்பு.

Anonymous said...

தமிழர்களுக்கு நமது மூதாதையர் விட்டுச் சென்ற சொத்துகளில் மிச்சம் இருக்கும் ஒரே சொத்து இந்த மொழி தான் ... இந்த தமிழ் மொசி எவ்வளவு லாஜிக்கான மொழி என்பதை தமிழ் மொழியல்லாத பிறநாட்டவர்கள் கூறும் போது தெரிகின்றது .. ரீங்காரமான மொழி எனவும் அழகியல் தன்மையும் லாஜிக்கல் தன்மையும் .. சிறு சிறு சொற்களால் நிரம்பியதும் நம் தமிழ் மொழி .. வா, போ, நில், செல் என சிறிய எளிமையான மொழியாக இது பரிணமித்து உள்ளது .. !!!

தமிழர்களுக்கு எதிரியே இந்த மதம் தான்.. சமணம் பௌத்தம் கொடுத்த அருட்கொடைகளை பிற்கால வைதிக சமயங்கள் அழித்தே போட்டன. அவை எஞ்சி இருந்தால் இன்று உலகின் இலக்கிய வள்ம் ததும்பிய ஒரே மொழி நம் மொழியாகவே இருந்திருக்கும் ... !!!

உ.வே.சா இல்லாமல் போயிருந்தால் மிச்சமும் சொச்சமும் கூட இல்லாமல் போயிருக்கும் .. !!!

ஞானாலயா செய்யும் சேவைகளை நானும் அறிந்தேன். எம்மால் ஆன உதவிகளை அவர்களுக்கு செய்ய ஆவலாக உள்ளேன் .. !!!

ஜோதிஜி said...

சார்வாகன், இக்பால் செல்வன்,

நீங்க இருவரும் வலையுலகில் இரண்டு ஆச்சரியமான துருவங்கள். ஆனால் அழுத்தமான நபர்கள். தங்களைப் பற்றிய எந்த விபரங்களையும் வெளியே காட்டிக் கொள்ளவே மாட்டேன் என்கிறீர்களே?

ஜோதிஜி said...

வாங்க குமார்.

நன்றி.